வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. 1954ஆம் ஆண்டின் அரசியலமைப்பு சட்டம் ஏழாவது பிரிவில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல். சர்மா மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு, இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை நீக்கக் கோரி தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் ஜனவரி 11ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் சார்பாக ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும், இரு தரப்பும் ஒத்து கருத்துக்கு வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். இம்மாதிரியான நிலையில், பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்தால் அந்த வாய்ப்பு கிட்டாது எனவும் அவர் கூறினார்.