ரசாயன பட்டாசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தடை விதித்துள்ளது. இருப்பினும் பட்டாசில் ரசாயனம் கலக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்தது.
இப்படிப்பட்ட சூழலில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை தளர்த்த கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த வாரம் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சிவகாசி பட்டாசுகளில் பேரியம் நைட்ரேட் கலக்கப்படுவதாக தெரிவித்து, ரசாயனம் கலக்கும் பட்டாசு உற்பத்தி நிறுவனங்களின் மீது சிபிஐ ஏன் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என கேள்வி எழுப்பி வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “பேரியம் நைட்ரேட்டை குடோனில் மட்டும்தான் வைத்திருப்பதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, உற்பத்தியாளர்கள் எதற்காக பேரியம் நைட்ரேட்டை குடோனில் வைத்திருந்தார்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள்கள் பாதுகாப்பு மையத்தின் சான்றிதழும் இல்லை என கூறிய நீதிபதிகள், பண்டிகை கொண்டாட்டங்களை நாங்கள் வெறுக்கவில்லை. ஆனால் மற்றவர்களின் உயிரை விலை வைத்து பண்டிகையை நாம் கொண்டாட முடியாது என்றும் கூறினர்.
இதனைத் தொடர்ந்து இருதரப்பும் விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 26ஆம் தேதிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.