டெல்லி:சுதிப்தோ சென் இயக்கிய 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம், கடந்த 5ம் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தில், கேரள மாநில பெண்கள் கடத்தப்பட்டு, ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கப்படுவது போல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருந்தன. இந்த படத்தின் டிரெய்லர் வெளியான போது, சிலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரசாரத்தை தூண்டுவதாக மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
மேலும் மேற்கு வங்கத்தில் கடந்த 8ம் தேதி முதல் இப்படத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்தப் படத்துக்கு எதிராக தமிழ்நாட்டில் ஒருசில அமைப்புகள் போராட்டம் நடத்தியதுடன், திரையரங்குகளுக்கு மிரட்டல் விடுத்ததால் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டது. மேற்கு வங்க மாநில அரசின் உத்தரவை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்குத் தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (மே 12) விசாரணைக்கு வந்தது.
அப்போது படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, "இத்திரைப்படம் குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், படம் வெளியாகி 3 நாட்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. அதன்பிறகே மேற்குவங்கத்தில் படத்தை திரையிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சில அமைப்புகள் மிரட்டியதால், திரையரங்க உரிமையாளர்கள் படத்தை திரையிடுவதை நிறுத்தியுள்ளனர்" என்றார்.