கொல்கத்தாவில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த காளி பூஜா, சாத் பூஜா உள்ளிட்ட வரவிருக்கும் பண்டிகைகளில் பட்டாசுகளைப் பயன்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் கடந்த வியாழக்கிழமை கொல்கத்தா உயர் நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து கவுதம் ராய், புர்ரா பஜார் பட்டாசு விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல்செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை அமர்வு, “திருவிழாக்கள் முக்கியமானவைதான். ஆனால் தொற்றுநோய்களுக்கு மத்தியில் "வாழ்க்கையே அழிவில் உள்ளது". உள்ளூர் நிலையை உயர் நீதிமன்றம் நன்கு அறிந்திருக்கும் என்பதால், மாநிலத்திற்கு தேவையானதைச் செய்ய உயர் நீதிமன்றத்தை அனுமதிக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், "கரோனா வைரஸ் தொற்று நோய்களிடையே பொதுமக்களின் உயிரைப் பாதுகாப்பது மிக முக்கியமானது. மேலும் மாநிலத்தின் சூழல் குறித்தும், மக்களுக்கு என்ன தேவை என்பது உயர் நீதிமன்றத்திற்குத் தெரியும்" என்று கூறியது.