டெல்லி:முன்னாள் ராணுவத்தினருக்காக 'ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. ஆனால், இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்த நிலையில், நிலுவைத் தொகையை மார்ச் 15ஆம் தேதிக்குள் வழங்க உத்தரவிட்டது.
இதற்கிடையே நிலுவைத் தொகையை 4 தவணைகளாக வழங்குவதாக ராணுவ அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கத்தினர் வழக்குத் தொடர்ந்தனர். அப்போது, 4 தவணைகளாக நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்ற அறிவிப்பை ராணுவ அமைச்சகம் திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவரை முன்னாள் வீரர்களுக்கு எவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (மார்ச் 20) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட ரமணி, சீலிடப்பட்ட கவரை நீதிபதிகளிடம் சமர்பித்தார். அப்போது சீலிடப்பட்ட கவரை ஏற்க மறுப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின்னர் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், "இதுபோன்ற சீலிடப்பட்ட கவரை வழங்குவதை தனிப்பட்ட முறையில் நான் மறுக்கிறேன். நீதிமன்ற செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது தொடர்பான வழக்கு இது.