டெல்லி:கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கோத்ரா ரயில் எரிப்புக்குப் பிறகு, கலவரம் நடைபெற்றது. இதில் பில்கிஸ் பானோ என்ற 5 மாத கர்ப்பிணி, கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அது மட்டுமல்லாமல், அவரது குழந்தை உள்பட 14 பேர் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று இந்த வழக்கில் கைதான 11 பேரும் குஜராத் அரசால் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், விடுதலை செய்யப்பட்ட 11 பேருக்கும் அரசு நிகழ்வில் மரியாதை செலுத்தும் வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி, கடும் கண்டனங்களைப் பெற்றன. இதனிடையே, 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ததை எதிர்த்து பில்கிஸ் பானோ தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இது தொடர்பான விசாரணை, கடந்த மார்ச் 27 அன்று நடைபெற்றது.
அப்போது, இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது குறித்து குஜராத் மற்றும் மத்திய அரசு கோப்புகளை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை, இன்று (ஏப்ரல் 18) மீண்டும் நடைபெற்றது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, “இந்த விவகாரத்தில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வதற்கு முன், மாநில அரசு தங்கள் மனசாட்சியினை கடைபிடித்ததா?
இன்று பில்கிஸ் பானோ, நாளை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். குற்றத்தின் கொடூரமான தன்மை மற்றும் சமூகத்தில் அதன் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, மாநில அரசின் மனதைப் பயன்படுத்துவதே முடிவிற்கான அடிப்படை. தன்னிச்சையான அல்லது அரசியல் உள்நோக்கம் கொண்ட பரிசீலனைகளுக்குப் பதிலாக, பொது நலன் மற்றும் புறநிலைத் தரங்களின் மூலம் நிவாரண அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும்.