தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

LAKHIMPUR KHERI VIOLENCE: காவல் துறை விசாரணையில் அதிருப்தி - உச்ச நீதிமன்றம் - LAKHIMPUR PROBE

லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் காவல் துறையினரின் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்றும்; விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LAKHIMPUR KERI VIOLENCE, supreme court investigation, LAKHIMPUR KERI VIOLENCE case, லக்கிம்பூர் கெரி வன்முறை, லக்கிம்பூர்
LAKHIMPUR KERI VIOLENCE

By

Published : Nov 8, 2021, 4:06 PM IST

Updated : Nov 8, 2021, 8:07 PM IST

டெல்லி: மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி போன்ற இடங்களில் விவசாயிகள் கடந்த ஓராண்டாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டக் களத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, கடந்த அக்டோபர் 3ஆம் தேதி உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா லக்கிம்பூர் கெரி அருகே விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்தார். லக்கிம்பூர் கெரி கிராமத்தில் அவருடைய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விஸ்வரூபம் எடுத்த வன்முறை சம்பவம்

அப்போது, விவசாயிகள் மீது காரை ஏற்றியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து எழுந்த வன்முறையில் மேலும் ஒரு செய்தியாளர் உள்பட நான்கு பேர் என மொத்தம் எட்டு பேர் உயிரிழந்தனர்.

மேலும், விவசாயிகள் மீது ஏறிய காரானது, ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுடையது எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின்னர், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.

ஒன்றிய அமைச்சர் மகன் கைது

நாடு முழுவதும் இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே, ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்பட 13 பேரை உத்தரப் பிரதேச குற்றப்பிரிவு காவலர்கள் கைது செய்தனர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று (நவ. 8) விசாரணைக்கு வந்தது. உத்தரப் பிரதேச அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஹரீஷ் சால்வே, கரீமா பிரசாத் ஆகியோர் ஆஜராகினர்.

இந்நிலையில், நீதிபதிகள் கூறுகையில்,"லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் உத்தரப்பிரதேச காவல் துறையினரின் விசாரணை எதிர்பார்த்தபடி மேற்கொள்ளப்படவில்லை.

குற்றாவளிகளின் செல்ஃபோன்கள் எங்கே?

இவ்வழக்கில் உத்தரப்பிரதேச அரசு அளித்துள்ள விசாரணை அறிக்கையில் குறிப்படத்தக்க வகையில் எதுவும் இல்லை. தற்போதுவரை, இவ்வழக்கின் தடயவியல் அறிக்கை கூட வெளிவராமல் உள்ளது. மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் செல்ஃபோனைக் கூட இன்னும் பறிமுதல் செய்யாத அளவில்தான் விசாரணை உள்ளது" எனக் குற்றஞ்சாட்டினர்.

அதைத் தொடர்ந்து, இந்த வழக்கில் காவல் துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்வரை, விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்றும்; வரும் வெள்ளிக்கிழமைக்குள் (நவ. 12) இதற்கு உரிய பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரப் பிரதேச அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற நீதிபதிகளான ராகேஷ் குமார் ஜெயின், ரஞ்சித் சிங் ஆகியோரை அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் கடந்த அக். 26ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, லக்கிம்பூர் கெரி வன்முறையில் வழக்கின் சாட்சியங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பணமோசடி வழக்கு: அனில் தேஷ்முக்கை அமலாக்கத்துறை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

Last Updated : Nov 8, 2021, 8:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details