டெல்லி: தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரணை செய்தனர்.
கர்நாடக அரசு தரப்பில், போதிய மழை இல்லாத காரணத்தினால் தண்ணீர் இல்லாத சூழல் உள்ளது. குறிப்பாக மழையின் அளவு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 42% குறைவு என்பதால் நீர் பற்றாக்குறை உள்ளது. மேலும் எங்கள் தரப்பு சிரமங்களை எடுத்துரைக்க காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் முயற்சி செய்யும் போது அதை கேட்காமல் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வெளிநடப்பு செய்கின்றனர்.
தமிழ்நாடு அரசு தரப்பில், காவிரி நீர் மேலாண்மை வாரியம் 10000 கன அடி வீதம் தண்ணீரை திறந்து விட உத்தரவிட்டும் அதனை கர்நாடக அரசு எற்க மறுத்து தண்ணீர் திறந்து விடாமல் உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் தண்ணீர் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து நீதிபதிகள், இரண்டு மாநிலங்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்த விவகாரத்ததை ஏன் எடுத்து செல்லக்கூடாது என கேள்வி எழுப்பினர். தமிழ்நாடு அரசு தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தப்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதை தவிர தங்களிடம் வேறு வழி இல்லை என் தெரிவிக்கப்பட்டது.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பதி கூறும்போது, அடுத்து வரும் நாட்களில் காவிரியில் இருந்து தண்ணீர் தமிழ்நாட்டிற்கு திறப்பது குறித்து வரும் திங்கட்கிழமை கூட்டம் நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.