கரோனா முதல் அலையின் தாக்கம் காரணமாக நேரில் ஆஜராகி விசாரணை மேற்கொள்ளும் முறை சிறிது காலத்திற்கு ரத்து செய்யப்பட்டிருந்தது. அதன் தினசரி எண்ணிக்கை குறைந்த நிலையில், நீதிபதிகள் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கின் விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் கிட்டத்தட்ட 80 ஊழியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, நீதிமன்றம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தங்களின் வீடுகளிலிருந்தே நீதிபதிகள் வழக்கின் விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
இதுகுறித்து நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திட்டமிட்ட நேரத்தைவிட ஒரு மணி நேரம் தாமதமாகவே வழக்கின் விசாரணை நடைபெறும். வழக்கமாக, காலை 10:30 மணிக்கு நீதிபதிகளின் விசாரணை தொடங்கும். இனி, அது 11:30 மணிக்கு தொடங்கும். தலைமை நீதிபதி கொண்ட அமர்வு 11 மணிக்கு பதில் 12 மணிக்கு விசாரணையை தொடங்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கின் விசாரணை எந்த நீதிமன்றத்தில் நடைபெறும், அதன் நேரம் போன்ற விவரங்கள் தற்போதைக்கு வெளியிடப்படாது. வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கின் விசாரணையை நடத்த உச்ச நீதிமன்றம் திட்டமிட்டுவருகிறது.