தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கு - சந்திரபாபு நாயுடுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்! என்ன காரணம்?

திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.

Chandrababu Naidu
Chandrababu Naidu

By PTI

Published : Nov 28, 2023, 4:06 PM IST

டெல்லி :கடந்த 2015 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இருந்த போது திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிதியில் 300 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக கூறி கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி மாநில சிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு தரப்பில் விஜயவாடா சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மற்றும் வீட்டு காவலில் வைப்பது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இரண்டு மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சந்திரபாபு நாயுடு தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு தரப்பில், 50 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதாகவும் வலது கண்ணில் சிகிச்கை அளிக்க வேண்டி உள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கூறி மீண்டும் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி சந்திரபாபு நாயுடுக்கு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கியும், வரும் நவம்பர் 24ஆம் தேதி மீண்டும் சரணடைய உத்தரவிட்டும், மருத்துவமனையில் கண் சம்பந்தமான சிகிச்சையை மேற்கொள்ள அறிவுறுத்தியும், வேறு எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்க கூடாது உள்பட பல்வேறு நிபந்தனைகளையும் விதித்து ஆந்திர உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதனையடுத்து ராஜமுந்திரி சிறையில் இருந்து சந்திரபாபு நாயுடு விடுதலை செய்யப்பட்டார். நவம்பர் 28ஆம் தேதியுடன் இடைக்கால ஜாமீன் நிறைவடைய இருந்த நிலையில், சந்திரபாபு நாயுடுக்கு தனியார் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டிய உள்ளதால், இடைக்கால ஜாமீனை, சாதாரண ஜாமீனாக மாற்றக் கோரி நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை கடந்த நவம்பர் 20ஆம் தேதி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், அதனை விசாரித்த நீதிபதிகள் சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது உள்ளிட்ட நிபந்தனைகளை நீக்கிக் கொண்டனர்.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன் வழங்கிய ஆந்திர உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த 21ஆம் தேதி மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேலும், வழக்கில் தொடர்புடைய அதிகாரிகள் சிலர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று விட்டதாகவும், முன்னாள் முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு தனது அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்கக் கூடும் எனபதால் ஜாமீன் உத்தரவை ரத்து செய்யக் கோரி மாநில அரசு தரப்பில் முறையிடப்பட்டது.

இந்நிலையில், இன்று (நவ. 28) மீண்டும் மனுவை விசாரித்த பேலா எம் திரிவேதி, எஸ்.சி. சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, டிசம்பர் 8ஆம் தேதி அடுத்த கட்ட விசாரணைக்கு வரும் வரை எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள கூடாது, வழக்கு தொடர்பாக பொது வழியில் பேசக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து நோட்டீஸ் வழங்கியது.

இதையும் படிங்க :சந்திரபாபு நாயுடு ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு! உச்ச நீதிமன்றத்தில் ஆந்திர அரசு மனுத் தாக்கல்!

ABOUT THE AUTHOR

...view details