பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட்.17) விசாரணைக்கு வந்தது.
இதில், பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த மனுக்களை தலைமை நீதிபதி ரமணா, சூர்ய காந்த், அனிருத்தா போஸ் ஆகியோரின் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு வாதம்
அப்போது பெகாசஸ் மென்பொருளை உளவு பார்க்கவும், ஒட்டுக்கேட்கவும் அரசு பயன்படுத்தியதா என்ற கேள்விக்கு பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, ”இந்த விவகாரத்தில் தேசப் பாதுகாப்பு உள்ளடங்கியுள்ளது. எனவே, இது தொடர்பான பிரமாணப் பத்திரத்தை அரசு பொது வெளியில் சமர்பிக்க முடியாது.
அதேவேளை, இது சம்பந்தமான கேள்விகளுக்கு நிபுணர் குழு முன் பதிலளிக்க அரசு தயாராக உள்ளது” என்றார்.
இந்த வாதத்தை கேட்டறிந்த நீதிபதிகள், தேசப் பாதுகாப்பை அச்சுறுத்தும் எந்தத் தகவலையும் நீதிமன்றம் கேட்கவில்லை. அதேவேளை புகார்கள் தொடர்பான தேவையான விளக்கங்களை அளிக்க உரிய நிபுணர் அமைப்பது குறித்து பத்து நாள்களில் நீதிமன்றம் முடிவு செய்யும்.
அதேவேளை, இஸ்ரேல் மென்பொருளை அரசு ஒட்டுக்கேட்க பயன்படுத்தியது என்ற புகாருக்கு பத்து நாள்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” என நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
பெகாசஸ் விவகராம்
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெகாஸஸ் என்ற மென்பொருள் நிறுவனத்தின் கருவியைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை மத்திய அரசு ஒட்டுக்கேட்டதாக ஊடகத்தில் செய்திகள் வெளியாகின.
தனி மனித சுதந்திரத்தை மீறும் விதமாக அரசு தனது அதிகாரத்தை தவறாக உபயோகித்ததாக குற்றஞ்சாட்டி நாடாளுமன்றக் கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முற்றிலும் முடக்கின. மேலும், பல்வேறு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க:மகாராஷ்டிரா எம்.எல்.ஏ.வுக்கு மூன்று மாத கால சிறைத் தண்டனை