டெல்லி:கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் காட்டு யானை, தமிழக வனப்பகுதி வழியாக தேனி மாவட்டம், கம்பம் நகரத்துக்குள் நுழைந்தது. கம்பம் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பன் ஒருவரை தாக்கி கொன்றதாகத் தெரிகிறது. மக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பனை மயக்க ஊசி செலுத்திப் பிடித்த வனத்துறையினர், கடந்த மாதம், நெல்லை மாவட்டம், களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கோதையாறு அணைப் பகுதியில் விடுவித்தனர். மேலும், யானையை ரேடியோ காலர் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அரிக்கொம்பன் யானையின் பாதுகாப்பு தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், "வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட அரிக்கொம்பன் யானை தற்போது எங்கு இருக்கிறது? எந்த நிலையில் இருக்கிறது? உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க உத்தரவிட வேண்டும். அரிக்கொம்பன் யானையின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கண்காணிக்கவும் குழு அமைக்கவும் கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று(ஜூலை 6) உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரிக்கொம்பன் யானை தொடர்பான மனுக்களால் தாங்கள் சோர்வடைந்துவிட்டதாகவும், இந்த மனுவை விசாரிக்க முடியாது, தேவைப்பட்டால் கேரள உயர் நீதிமன்றத்திற்குச் செல்லும்படியும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "குறைந்தபட்சம் அரிக்கொம்பன் யானை எங்கு இருக்கிறது? உயிரோடு இருக்கிறதா? இல்லையா? என்பதையாவது தெரிவிக்க வேண்டும்" எனக் கூறினார்.