டெல்லி: செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவரது தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து சிவசங்கர் பாபா சார்பில் வழக்கறிஞர் ஸ்வாதி ஜிந்தல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு கடந்த மார்ச் 8ஆம் தேதி விசாரித்தது. மேல்முறையீட்டு மனு தொடர்பாக 2 வாரங்களில் பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டால், சாட்சிகளை அச்சுறுத்தி ஆதாரங்களை கலைத்துவிடுவார். வழக்கு விசாரணையில் இருந்து தப்பித்துக்கொள்ள அவர் வெளிநாடு செல்ல அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.
எனவே சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (ஏப்ரல் 8) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டிற்குள் நுழையவும், சாட்சிகளை அச்சுறுத்தி ஆதாரங்களை கலைத்தால் நிபந்தனை ஜாமீன் ரத்து செய்யப்படும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கொடைக்கானல் வனப்பகுதி சாலைக்கு தடைக்கோரிய வழக்கு - ஏப்.13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு