டெல்லி:உச்சநீதிமன்ற நீதிபதிகளான தினேஷ் மகேஷ்வரி மற்றும் எம்ஆர்.ஷா ஆகியோர் ஓய்வு பெற்றதையடுத்து, உச்சநீதிமன்ற நிதிபதிகளின் எண்ணிக்கை 32ஆக குறைந்தது. இதையடுத்து, ஆந்திர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த்குமார் மிஸ்ரா மற்றும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கல்பாத்தி வெங்கடராமன் விஸ்வநாதன் ஆகியோரின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. கொலிஜியம் கடந்த 16ஆம் தேதி இந்த பரிந்துரையை வழங்கியிருந்தது.
இதையடுத்து, நீதிபதி பிரசாந்த்குமார் மிஸ்ரா மற்றும் மூத்த வழக்கறிஞர் கல்பாத்தி வெங்கடராமன் விஸ்வநாதன் இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து நேற்று(மே.18) மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்த 2 நாட்களிலேயே இரண்டு புதிய நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, புதிதாக நியமிக்கப்பட்ட இரண்டு(மே.19) பேரும் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றனர். இருவருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நீதிபதிகள் மிஸ்ரா, விஸ்வநாதன் இருவரும் இன்று பதவியேற்றதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்தது. இதில், நீதிபதி விஸ்வநாதன் 2031ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி வரையில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகிப்பார் என்றும், 2030ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி நீதிபதி ஜே.பி. பர்திவாலா ஓய்வுபெறும் போது, விஸ்வநாதன் தலைமை நீதிபதியாக பதவியேற்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. மேலும், நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர்களில் பத்தாவது நபர் விஸ்வநாதன் ஆவார்.