டெல்லி: தலைநகர்டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர், சத்யேந்தர் ஜெயின். இவர் சட்டவிரோதமாகப் பணப் பரிவர்த்தனை செய்ததாக எழுந்த புகார்கள் எழுந்த நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சத்யேந்தர் ஜெயின் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
இதனையடுத்து இந்த வழக்கு அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரி சத்யேந்தர் ஜெயின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், சிறைக்குச் சென்ற பிறகு சத்யேந்தர் ஜெயின் உடல் ரீதியாக பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகி இருப்பதாகவும், சுமார் 15 கிலோ எடை குறைந்து இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் வழங்க முடியாது எனவும், அவரை வெளியே அனுமதித்தால் சாட்சியங்கள் அழிக்கப்படும் எனவும் குறிப்பிட்டு ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து, சிறையில் இருந்து வந்த சத்யேந்தர் ஜெயின், அங்கு உள்ள கழிவறையில் தலை சுற்றி வழுக்கி கீழே விழுந்து உள்ளார்.