டெல்லி: கடந்த 2018ஆம் ஆண்டு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில், அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் அளித்திருந்தார். அதில், தமிழ்நாட்டில் ரூ.4 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை திட்ட பணிகள் தொடர்பான டெண்டர் ஒப்பந்தங்களை எடப்பாடி பழனிசாமி, அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு முறைகேடாக வழங்கியதாக கூறப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்றம் தீர்ப்பு:மேலும், இந்த திட்ட பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக, எடப்பாடி பழனிசாமி மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், தேவைப்பட்டால் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தலாம் என 2018ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேலும், அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதித்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இருதரப்பு வாதங்கள்: நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த வழக்கை விசாரிக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இந்நிலையில், ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான அமர்வின் முன்பு இன்று (ஆக. 3) விசாரணைக்கு வந்தது.