தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மண்டோலி சிறையிலிருந்து வேறு சிறைக்கு மாற்றக்கோரிய சுகேஷ் சந்திரசேகரின் மனு தள்ளுபடி! - உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி மண்டோலி சிறையிலிருந்து டெல்லி சிறைத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத வேறு சிறைக்கு மாற்றக் கோரி சுகேஷ் சந்திரசேகர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

SC
SC

By

Published : Oct 18, 2022, 3:54 PM IST

டெல்லி:தொழிலதிபரின் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பான வழக்கில், சுகேஷ் சந்திரசேகர், அவரது மனைவி லீனா மரியா, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதில் சுகேஷ் சந்திரசேகரும் அவரது மனைவியும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அந்த சிறையில் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் டெல்லிக்கு உள்ளே இருக்கும் சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் சுகேஷ் சந்திரசேகரும் அவரது மனைவியும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் டெல்லி மண்டோலி சிறைக்கு மாற்ற உத்தரவிட்டது. அதன்படி இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் மண்டோலி சிறைக்கு மாற்றப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து மண்டோலி சிறையில் இருந்து டெல்லி சிறைத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத வேறு சிறைக்கு மாற்றக்கோரி சுகேஷ் சந்திரசேகர் தரப்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. சுகேஷ் சந்திரசேகர் சிறையில் தாக்கப்பட்டதாக கூறி, அதுதொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்தனர்.

இதுதொடர்பாக டெல்லி சிறைத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், சுகேஷ் சந்திரசேகர் சிறையில் தாக்கப்பட்டதாக கூறுவது பொய் என்றும், வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று மீண்டும் விசாரித்த உச்சநீதிமன்றம், மனுவில் விசாரணைக்கான போதிய காரணங்கள் ஏதும் இல்லை என்றும், இதுபோன்ற மனுக்களை அனுமதிக்க முடியாது என்றும் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையும் படிங்க: நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்-க்கு இடைக்கால ஜாமீன்

ABOUT THE AUTHOR

...view details