தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

“தப்லீக் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த வெளிநாட்டினரை திருப்பி அனுப்ப வசதி செய்துதர வேண்டும்” - உச்ச நீதிமன்றம் - தப்லீக் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த 36 வெளிநாட்டினர்

டெல்லி : உள்துறை அமைச்சகத்தால் தடுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் தப்லீக் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த 36 வெளிநாட்டினரை, அவரவர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப வசதி செய்துதர வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SC directs Centre to facilitate return of 36 Tablighi Jamaat foreigners
“தப்லீக் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த வெளிநாட்டினரை திருப்பி அனுப்ப வசதி செய்துதர வேண்டும்” - உச்ச நீதிமன்றம்

By

Published : Dec 21, 2020, 4:43 PM IST

உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் நாடு தழுவிய முழு ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்திருந்தது. மக்கள் ஒன்று கூடுவதற்கும், மத வழபாட்டுத் தலங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றில் நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், டெல்லி நிசாமுதின் பகுதியில் சவுதி அரேபியா, மலேசியா, இந்தோனேஷியா போன்ற பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விதிமுறைகளை மீறி அந்த சமய மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் கோவிட்-19 பாதிப்பிற்குள்ளாகி இருந்தததை அடுத்து அதில் கலந்துகொண்ட பலருக்கும் தொற்று பரவியது. இம்மாநாட்டால், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொற்றுநோய் வேகமாக பரவியதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டினர்.

இதனையடுத்து, விசா விதிமுறைகளை மீறி தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்றதாக 35 நாடுகளைச் சேர்ந்தவர்களை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தடுப்புப் பட்டியலில் வைத்துள்ளது. இவர்களில் பலர் சொந்த நாடுகளுக்கு செல்ல இயலாமல் தற்போது வரை இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தடுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டினர், வழக்குரைஞர்கள் புஜைல் அஹ்மத் அய்யூபி மற்றும் ஆஷிமா மாண்ட்லா மூலமாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

அதில், “ விதிமுறைகளை மீறி டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் சமய மாநாட்டில் கலந்துகொண்ட 35 நாடுகளைச் சேர்ந்தவர்களின் பெயர்களை 10 ஆண்டுகளுக்கு தடுப்புப் பட்டியலில் வைக்குமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து அவர்கள் பலர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அத்துடன், அவர்களது பாஸ்போர்ட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுவரை வெளிநாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்து 460 பேர் 10 ஆண்டுகளுக்கு தடுப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை குறித்து சம்மந்தப்பட்ட வெளி நாட்டவர்களுக்கு எந்தவொரு தகவலும் அளிக்கப்படவில்லை. சமய மாநாட்டில் கலந்து கொண்டவர்களை தடுப்புப் பட்டியலில் வைத்திருப்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் எதேச்சதிகாரமான முடிவு. இது அரசியலமைப்பு சட்டம் 21ஐ மீறும் செயலாகவே கருதப்பட வேண்டும். எனவே, தடுப்புப் பட்டியல் குறித்து ஆராய்ந்து, பாதிக்கப்பட்டுள்ள வெளி நாட்டினரை மீண்டும் அவர்களது தாயகங்களுக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசின் வெளி விவகார அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவானது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர்,பி.ஆர்.கவாய், கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக இன்று (டிச.21) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், “ டெல்லியின் நிஜாமுதீனில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட காரணத்தால் உள்துறை அமைச்சகத்தால் தடுப்புப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ள 36 வெளிநாட்டினரை அவர்களது சொந்த தாயகங்களுக்கு திரும்பி அனுப்புவதற்கு வசதியாக பிரதிநிதித்துவம் செய்ய நோடல் அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட துறையின் வழியில் இந்தியாவிற்குள் நுழைந்திராத வெளிநாட்டவர்கள் தங்களது வெளியேற்றம் / விடுதலை தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்து அறிய விரும்பினால் நோடல் அலுவலர் தனது உதவிகளை வழங்கி, பிரச்னையைத் தீர்க்க முடியும். திரும்பி செல்வதில் சிரமங்களை எதிர்கொள்ளும் எந்தவொரு வெளிநாட்டு நாட்டவரும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அவர் தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்

“தப்லீக் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த வெளிநாட்டினரை திருப்பி அனுப்ப வசதி செய்துதர வேண்டும்” - உச்ச நீதிமன்றம்

இன்னும் நிலுவையில் டெல்லி மாநாடு தொடர்பான வழக்குகளை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் முடித்து, அது குறித்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ” என கூறி உத்தரவிட்டு வழக்கின் மேலதிக விசாரணையை 2021 ஜனவரி 5 ஆம் தேதி ஒத்திவைத்தது.

இதையும் படிங்க :திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த பாஜக எம்.பியின் மனைவி

ABOUT THE AUTHOR

...view details