தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'இரு விரல் சோதனை' நடத்தத்தடை... இதுதொடர்பான பாடங்களை நீக்கவும் உத்தரவு! - உச்சநீதிமன்றம் உத்தரவு

பாலியல் வன்கொடுமை வழக்குகளில், இரு விரல் சோதனை நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். மருத்துவக் கல்லூரிகளின் பாடத்திட்டத்திலிருந்து இரு விரல் பரிசோதனை தொடர்பான பாடங்களை நீக்கவும் உத்தரவிட்டனர்.

SC
SC

By

Published : Oct 31, 2022, 7:12 PM IST

டெல்லி: பாலியல் வன்கொடுமை வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண் வன்புணர்வு செய்யப்பட்டதை உறுதி செய்வதற்காக மருத்துவர்கள் இரு விரல் சோதனையை செய்தனர். இந்த இருவிரல் சோதனைப் பெண்களின் தனியுரிமையை மீறும் வகையில் இருப்பதாகக் கூறி, உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே இதற்குத் தடை விதித்துள்ளது. ஆனால், ஆங்காங்கே இந்த சோதனைகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றவாளியை விடுவித்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் ஹிமா கோலி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, குற்றவாளிக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்தனர். இந்த வழக்கில் இருவிரல் பரிசோதனை அடிப்படையில் குற்றவாளியை உயர் நீதிமன்றம் விடுவித்தாக கூறப்படுகிறது. இதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இருவிரல் சோதனைப்பெண்களின் தனியுரிமையை மீறும் வகையில் இருப்பதால் 2013ஆம் ஆண்டே உச்ச நீதிமன்றம் இதற்குத் தடை விதித்து, ஆனால் இன்றும் இது நடைமுறையில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த செயல்முறை பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிப்பது என்றும், உடலுறவு கொள்ளும் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ய முடியாது என்று கூற இயலாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இரு விரல் சோதனை நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இரு விரல் சோதனை செய்யும் எந்தவொரு நபரும் குற்றவாளியாக கருதப்பட்டு, அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

அதேபோல் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளின் பாடத்திட்டத்திலிருந்து இரு விரல் பரிசோதனை தொடர்பான பாடங்களை நீக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய, மாநில சுகாதாரத்துறைச்செயலாளர்களுக்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: குழந்தைகள் காலை உணவை தவிர்க்க வேண்டாம் – யுனிசெப் எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details