டெல்லி: திரிபுராவைச் சேர்ந்த பிகாஷ் சாஹா என்பவர் முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டு வரும் இசட் பிளஸ் பாதுகாப்பு குறித்து பொதுநலன் வழக்கு ஒன்றை திரிபுரா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த மே 31, ஜூன் 21 ஆகிய தேதிகளில் இரண்டு இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்தது.
அதன்படி, அச்சுறுத்தல் காரணமாக முகேஷ் அம்பானி, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்த கோப்புகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, திரிபுரா உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உள்துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
உச்ச நீதிமன்றத்தில் விடுமுறைக்கால அமர்வு கடந்த ஜூன் 29ஆம் தேதி திரிபுரா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. தொடர்ந்து, உள்துறை அமைச்சக அலுவலர்களை நேரில் வந்து விளக்கம் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதி கிருஷ்ணமா முராரி, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று (ஜூலை 22) விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "திரிபுராவில் இருக்கும் மனுதாரருக்கும், மும்பையில் ஒரு தனிநபருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்தும் எந்த தொடர்பும் இல்லை" என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டு வரும் இசட் பிளஸ் பாதுகாப்பை தொடரலாம் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இதையும் படிங்க:முகேஷ் அம்பானி ராஜினாமா; ரிலையன்ஸ் ஜியோ தலைவராக ஆகாஷ் அம்பானி நியமனம்!