டெல்லி: கடந்த 2018ஆம் ஆண்டு, டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், பாஜக செய்தித் தொடர்பாளரும் மூத்த தலைவருமான ஷாநவாஸ் ஹுசைன் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பாக ஷாநவாஸ் ஹுசைன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அந்த பெண் மனு தாக்கல் செய்தார்.
அதன்படி ஷாநவாஸ் மீது வழக்குப்பதிவு செய்ய மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஷாநவாஸ் முறையீடு செய்தார். மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஷாநவாஸ் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை நேற்று(ஆக.17) விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஷாநவாஸ் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தும், மாவட்ட நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை ரத்து செய்தும் தீர்ப்பளித்தது. மேலும், ஷாநவாஸ் மீது உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்யும் உத்தரவிட்டது.