டெல்லி: சிம்லா மேம்பாட்டுத் திட்டப் பணிகள் 2041இன் வரைவு திட்ட அறிக்கையை இமாச்சலப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே இதற்கு அம்மாநில அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு இந்த திட்டத்திற்கு பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது. இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் ஜே.பி.பார் திவாலா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பசுமை தீர்ப்பாயம் தரப்பில், கடந்த ஆட்சியில் சிம்லா மேம்பாட்டுத் திட்டத்திற்கான வரைவு அறிக்கை அப்போதைய அரசால் வழங்கப்பட்டதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டு அதற்கு அனுமதி வழங்கவில்லை எனவும் தெரிவித்தது. மேலும் 2017 சிம்லாவில் உள்ள கட்டுமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தற்போதைய சிம்லா மேம்பாட்டுத் திட்டம் 2041 முற்றிலும் மாறுபட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த திட்டத்திற்கு தடை விதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், வரைவு மேம்பாட்டுத் திட்டத்திற்கு எதிராக 99 ஆட்சேபனைகள் வந்திருப்பதாக அம்மாநில அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், " இந்த வழக்கில் பெறப்பட்ட ஆட்சேபனைகள் குறித்து பரிசீலனை மேற்கொண்ட பிறகு, இறுதி வளர்ச்சித் திட்டத்தை வெளியிடுவதுதான் சிறந்தது. தற்போதைய சூழலில் இறுதி வளர்ச்சி திட்ட வரைவு அறிக்கை பயனளிக்காது. மேலும், இந்த இறுதி வரைவு திட்ட அறிக்கையை இன்று முதல் ஆறு வாரத்திற்குள் வெளியிட வேண்டும்” என இமாச்சலப்பிரதேச அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் இடங்களை தேர்வு செய்ய கால நீட்டிப்பு!