டெல்லி:அதிமுக பொதுக்குழு வழக்கு மீதான விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலான கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பொதுச் செயலாளர் தெர்தலும் அறிவிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த தீர்மானங்களை எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணையில், பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், 2,460 பொதுக்குழு உறுப்பினர்களும் நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லும் என கூறப்பட்டது.
இதையும் படிங்க: மின் கட்டண உயர்வு; டிச.12ஆம் தேதி மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் - தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு அறிவிப்பு!
இதனால் இந்த மனுவை கடந்த மார்ச் 28ஆம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ் பாபு நிராகரித்து உத்தரவிட்டார். இந்நிலையில், இத்தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவாகத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், அந்த கோரிக்கையை ஆகஸ்ட் 25ஆம் தேதி நிராகரித்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று (நவ.28) நடைபெற இருந்த நிலையில், விசாரணையை ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் சார்பில் கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டது.
ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், வழக்கை ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: கும்பகோணம் விஸ்வநாதர் கோயில் தனிநபர் பட்டா ரத்து செய்ய உத்தரவு - வழக்கறிஞர் ஆர்.பிரகாஷ் தகவல்!