புது டெல்லி: நாட்டின் மிகப் பெரும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (பிஎஸ்பிடி - BSBD) கணக்குகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கான திருத்தப்பட்ட சேவை வரியை நாளை (ஜூலை.01) முதல் அமல்படுத்துகிறது.
4 முறைக்கு மேல் 15 ரூபாய் கட்டணம்
அதன்படி, இனி ஏடிஎம்களில் மாதம் நான்கு இலவச பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்பவர்களுக்கு 15 ரூபாய் கட்டணம் ஜிஎஸ்டியுடன் ஒவ்வொரு முறையும் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், பணமில்லாத பிற பரிமாற்றங்களைக் கொண்ட சேவைகளுக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசோலை புத்தகத்துக்கான கட்டண விவரம்
அதே போல், வாடிக்கையாளர்கள் ஒரு ஆண்டில் 10 காசோலை இதழ்களை எந்தக் கட்டணமும் இன்றி பயன்படுத்தலாம் என்றும், 10 காசோலை இதழ்களைக் கொண்ட புத்தகத்திற்கு 40 ரூபாய் கட்டணமும், 25 காசோலை இதழ்களைக் கொண்ட புத்தகத்திற்கு 75 ரூபாய் கட்டணமும், அவசர கால காசோலை புத்தகத்திற்கு 50 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்தல் குடிமக்களுக்கு இதில் இருந்து விலக்கி அளிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்பிடி கணக்கு
KYC தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தபின் பிஎஸ்பிடி கணக்குகளை எந்தவொரு நபரும் வங்கிகளில் வைத்துக்கொள்ள முடியும். சமூகத்தின் பின்தங்கிய நபர்கள் கட்டண சுமையின்றி சேமிக்க ஊக்குவிக்கும் வகையிலேயே இந்த பிஎஸ்பிடி கணக்குகள் உருவாக்கப்பட்டன.
கடந்த ஏப்ரல் மாதம் ஐஐடி பாம்பே வெளியிட்ட ஆய்வு முடிவுகளின்படி, 2015-20ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட 12 கோடி பிஎஸ்பிடி கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு சேவைக் கட்டணங்களை விதிப்பதன் மூலம் பாரத் ஸ்டேட் வங்கி 300 கோடிக்கு மேல் சம்பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:’மல்லையாவில் சொத்துகளை விற்று கடன் தொகையைப் பெற திட்டம்’ - பிஎன்பி வங்கி