ஹைதராபாத் (தெலங்கானா):தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காதல் திருமணம் செய்ததற்காகத் தங்கையின் கணவனை அண்ணன் நடுரோட்டில் கொடூரமாகக் கொலை செய்த சம்பவத்தில் காவல்துறையினர் விசாரணையில் திடுக்கிடும் உண்மை வெளிவந்துள்ளது.
கொலையில் ஈடுபட்ட அஸ்ரினின் அண்ணன் சையத் மொபின் மார்ச் மாத தொடக்கத்திலேயே கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், ரம்ஜான் நோன்பிற்காக விரதம் இருக்க வேண்டியிருந்ததால் கொலையைத் தள்ளிப்போட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அஸ்ரின் மற்றும் நாகராஜ் ஆகியோர் விக்ராபாத் மாவட்டத்தில் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். அஸ்ரின் குடும்பத்தில் அவரது தந்தை இறந்தபின்பு அவரது அண்ணனும், கொலையாளியுமான சையத் மொபின் குடும்பத்தின் வரவு செலவுகளைப் பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் அஸ்ரினின் மற்றொரு சகோதாரியை மசூத் அகமத் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். அடுத்ததாக உள்ள அஸ்ரினிற்கு ஒரு மனைவி இழந்த விதவை மணமகன் ஒருவரைத் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.
இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத அஸ்ரின் ஜனவரி மாதம் வீட்டை விட்டு வெளியேறி அவரது காதலர் நாகராஜைப் பிப்ரவரி மாதம் ஹைதராபாத் ஆரிய சமாஜ்ஜில் திருமணம் செய்து கொண்டார். காதல் தம்பதியரான நாகராஜ் மற்றும் அஸ்ரின் சுல்தானா ஆகியோர் திருமணம் செய்து கொண்ட பிறகு அஸ்ரினின் குடும்பத்தாருக்குப் பயந்து மறைந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
காவல்துறையினர் எச்சரிக்கை: இருவரின் திருமணத்தையடுத்து அஸ்ரின் விக்ராபாத் மாவட்ட காவல் ஆணையரிடம் தங்களுக்கு அவரது குடும்பத்தினரால் ஆபத்து இருப்பதாகக் காவல் அளிக்கக் கோரி கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் பாலநகர் காவல்நிலையத்தில் இரு தரப்பு குடும்பத்தினரையும் அழைத்துப் பேசி காதலர்களைத் தொந்தரவு செய்யக் கூடாதென்று எச்சரித்துள்ளனர். இதற்கிடையில் நாகராஜ் மதம் மாற தயாராக இருப்பதாக சையது மொபினிடம் அலை பேசியில் தெரிவித்துள்ளார். பின்னர் சையது இருவரையும் அவரது உறவினருடன் சேர்ந்து கண்காணித்துக் கொலைசெய்துள்ளார்.
ரம்ஜான் நோன்பிற்காகக் கொலை ஒத்திவைப்பு:அஸ்ரின் மற்றும் நாகராஜ் ஆகியோரை கொலை செய்த சையது மொபின் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. நாகராஜைக் கொலை செய்ய மார்ச் மாதம் திட்டமிட்ட சையது, ரம்ஜான் நோன்பிற்காக கொலையைத் தள்ளிப் போட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இது அங்கு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:Honour Killing: ஹைதராபாத்தை உலுக்கிய ஆணவக் கொலை சம்பவத்தில் இருவர் கைது!