பாட்னா: கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் சனாதனம் குறித்துத் தெரிவித்த கருத்து சர்ச்சைக்குள்ளானது. பாஜக அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இவரது கருத்துக்கு அதிருப்தி தெரிவித்தனர்.
அதேபோல், சனாதன தர்மம் குறித்து அவதூறாகக் கருத்து தெரிவித்துள்ளார் என உதயநிதி ஸ்டாலின் மீது பலர் வழக்கும் தொடர்ந்தனர். அந்த வகையில், பாட்னா உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கெளசலேந்திர நாராயணன் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பாட்னா சிஜேஎம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக இருப்பதால், அந்த வழக்கு எம்பி எம்எல்ஏ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து ஜனவரி 6ஆம் தேதி ஐபிசியின் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சமன் அனுப்ப உத்தரவிட்டது.