டேராடூன்:ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களுக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. பிபின் ராவத், அவர் மனைவி மதுலிக்கா ராவத் ஆகியோர் உடல்கள் நேற்று (டிசம்பர் 11) ஒரே மேடையில் தகனம் செய்யப்பட்டன.
இந்நிலையில், பிபின் ராவத்தின் சொந்த மாநிலமான உத்ரகாண்ட் சட்டப்பேரவையில் அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு நாள்கள் நடைபெறும் சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
அவை ஒத்திவைப்பு
அப்போது, தேவ்பிரயாக் எம்எல்ஏ வினோத் கன்டாரி ஒரு தீர்மானத்தை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில்,"தேவ்பிராய்க்கில் கட்டப்பட்டு வரும் சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு மறைந்த பிபின் ராவத்தின் பெயர் சூட்டப்பட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தீர்மானம் ஒரு மனதாக சட்டப்பேரவையில் நிறைவேறியது.
மேலும், டேராடூன் நகரில் ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக கட்டப்படும் 'சைனியா தாம்' என்னும் நினைவிடத்திற்கு பிபின் ராவத் பெயர் சூட்ட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவரும், ஹரித்துவார் எம்எல்ஏ-வுமான மதன் கௌசிக் தீர்மானம் கொண்டு வந்தார். இதன்பிறகு, சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க: விடைபெற்றார் பிபின் ராவத்: ராணுவ மரியாதையுடன் நடைபெற்ற இறுதிச் சடங்கு