நாடு முழுவதும் நேற்று முன்தினம் (ஜன.31) போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது. 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டம் காப்சிகோப்ரி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு வாந்தி எடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டது.
உடனடியாக, அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். குழந்தையை மருத்துவர் பரிசோதித்த பிறகுதான், போலியோ சொட்டு மருந்து முகாமில் நடந்த பெரும் குழப்பம் வெளிவந்துள்ளது.
முகாமில் பணியாற்றிய ஊழியர்கள் போலியோ சொட்டு மருந்துக்குப் பதிலாக சானிடைசரை 12 குழந்தைகளுக்கு கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட 12 குழந்தைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது உடல்நிலை சீராக இருப்பதாக யவத்மால் மாவட்ட பஞ்சாயத்து தலைமை நிர்வாக அலுவலர் ஸ்ரீகிருஷ்ண பஞ்சால் தெரிவித்தார். தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்த மாவட்ட துணைஆட்சியர், குழந்தைகளின் உடல்நலம் குறித்து விசாரித்தார். இச்சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவர், சுகாதாரப் பணியாளர் உள்பட 3 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
போலியோ சொட்டு மருந்து முகாமில் அரங்கேறிய மிகப்பெரிய தவறானது, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.