வடக்கு வங்காளத்தின் ராஜ்கஞ்ச் பகுதியில் உள்ள கயெட்கோச் கிராமத்தில் வசிப்பவர் ரமேஷ் ராய். இவர் கடந்த 12 நாள்களுக்கு முன்பாக பிரதமரின் உஜ்வாலா யோஜானா திட்டத்தின்கீழ் சமையல் எரிவாயு உருளை வாங்கியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிலிண்டரிலிலிருந்து எரிவாயு வராமல் இருந்துள்ளது. சிலிண்டர் வாங்கிய இரண்டு வாரத்திற்குள் எப்படி எரிவாயு முழுமையாகத் தீர்ந்துள்ளது என்று ரமேஷ் ராய்க்கு சந்தேகம் வந்து, சிலிண்டரைத் தூக்கிப் பார்த்துள்ளார்.
வழக்கமான எடையைவிட உருளையின் எடை அதிகமாக இருந்துள்ளது. வழக்கமாக சமையல் எரிவாயு உருளையின் எடையானது 15 கிலோ இருக்க வேண்டும், ஆனால் இந்த உருளையின் எடை 21 கிலோ இருந்துள்ளது.
இதனால் மேலும் சந்தேகமடைந்த ரமேஷ், அவரது உறவினர்கள் முன்னிலையில், உருளையை உடைத்துப் பார்த்துள்ளார். அதில் கிட்டத்தட்ட 6 கிலோ அளவிற்கு மணல் உருளையில் நிரப்பப்பட்டிருந்தைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக சிலிண்டர் டெலிவரி செய்யும் முகவர்களிடம் இந்த விவகாரத்தைத் தெரிவித்துள்ளனர்.
சிலிண்டருக்குள் அடைக்கப்பட்டிருந்த மணல் இது குறித்து டெலிவரி செய்தவர் கூறுகையில், ”சிலிண்டர் விநியோகிப்பது மட்டும்தான் என் வேலை, சிலிண்டருக்குள் மணல் எப்படி வந்தது என்பது எனக்குத் தெரியாது. எனினும், இந்த விவகாரம் குறித்து ராஜ்கஞ்ச் எல்பிஜி சிலிண்டர் விநியோகிப்பவர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்" என்றார்.
பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட உருளையில் மணல் இருந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கரோனா எதிரொலி: குறைந்தது சிலிண்டர் விலை!