புரி: ரக்ஷா பந்தன் திருநாளையொட்டி பூமி தாயே சந்திரனுக்கு ராக்கி கட்டுவதுபோன்ற மணல் சிற்பத்தை வடிவமைத்து அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளார் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக். கடற்கரை மணலில் கண் கவர் வர்ணங்களுடன் அவர் வடிவமைத்துள்ள சிற்பம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அது மட்டும் இன்றி இந்த சிற்பத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
நாட்டில் நடக்கும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளையும் தனது மணல் சிற்பக்கலை மூலம் உலகம் முழுவதும் கொண்டு சேர்ப்பவர் பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயக்.இவர் கடற்கரை மணலில் இன்று ஒரு மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார். சந்திரயான் 3 வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே இருக்கும் நெருக்கத்தை உணர்த்தும் விதமாகவும் அவர் அந்த சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
ரக்ஷா பந்தன் திருநாள் என்பது இந்திய நாட்டின் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான ஒரு பண்டிகை. இந்த பண்டிகையின் போது சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள். நாடித் துடிப்பு இருக்கும் மணிக்கட்டு பகுதியில் கட்டப்படும் அந்த ராக்கி உணர்வுப் பூர்வமாகச் சகோதர சகோதரிகள் இடையேயான உறவை வலுப்படுத்துகிறது.
அப்போது சகோதரர்கள் தங்கள் சகோதரிகளின் வாழ்கையிலும், பாதுகாப்பிலும் துணையாக நிற்போம் என உறுதி கொள்வார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பண்டிகையைப் பூமி தாயும், சந்திரனும் கொண்டாடும் விதமாக சுதர்சன் பட்நாயக் தனது மணல் சிற்பத்தை வடிவமைத்துச் சிறப்பித்துள்ளார்.