ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்): ராஜஸ்தான் மாநிலம் பந்தாடி கிராமத்தில் நேற்று (ஆகஸ்ட் 12) கார்-பஸ் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒரு குழந்தை உள்பட இருவர் படுகாயமடைந்தனர்.
ராஜஸ்தானின் சிகார் என்னும் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த கார், பந்தாடி கிராமத்தின் டிட்ரி சௌராஹா என்ற இடத்தின் அருகே வந்தபோது, அங்குள்ள ஒரு திருப்பத்தில் திரும்புகையில் எதிரில் வந்த பஸ் மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு குழந்தை உள்பட படுகாயமடைந்த இருவருக்கு தித்வானாவில் உள்ள அரசு பாங்கர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு ஜெய்ப்பூருக்கு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டது. இது குறித்து ஸ்டேஷன் ஆபிசர் (SO) தரம்சந்த் புனியா கூறுகையில், “சிகாரில் இருந்து வந்த வாகனம் 9 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் வந்த ஒரு கூர்மையான திருப்பத்தில் ஓட்டுநர்கள் ஒருவருக்கொருவர் கவனிக்காமல் காரும் பேருந்தும் மோதி இருக்கலாம். விசாரணைக்கு பின்னர் விபத்துக்கான காரணம் தெரிய வரும்” என தெரிவித்தார்.