ஜல்னா (மகாராஷ்டிரா): மராத்தா இட ஒதுக்கீடு கோரி 15 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் மனோஜ் ஜரங்கே பாட்டீலை சந்தித்த சம்பாஜி பிடே, தனது ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா மாவட்டத்திலுள்ள அந்தர்வாலி சாரதி கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் மராத்தா சமூகத்திற்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) பிரிவின் கீழ் வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து 15 நாட்களாக நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. தெற்கு மும்பையில் உள்ள சஹ்யாத்ரி விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற இந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் மராத்தா இட ஒதுக்கீடு குறித்து விவாதிக்கப்பட்டு, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மனோஜ் ஜரங்கே பாட்டீல் போராட்டத்தை கைவிட வேண்டும் என அனைவரும் முடிவு செய்தனர். ஆனால், மனோஜ் ஜரங்கோ பாட்டீல் போராட்டத்தை கைவிடவில்லை.
இதையும் படிங்க:சந்திரபாபு நாயுடுவின் வீட்டுக் காவல் மனு ரத்து!
இந்த நிலையில் 15 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மனோஜ் ஜரங்கோ பாட்டீலின் உடல்நிலை மோசமடைந்து வரும் நிலையில் அவரை சந்தித்த ஷிவ்பிரதிஷ்தான் ஹிந்துஸ்தானின் நிறுவனர் மற்றும் தலைவரான சம்பாஜி பிடே உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்தினார்.