ஐதராபாத் : சர்வதேச அளவில் பணம் கொழிக்கும் விளையாட்டுகளில் ஒன்றாக கிரிக்கெட் உள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் மீதான மோகம் என்பது வயது வரம்பின்றி சிறு வயது முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதும் காணப்படுகிறது. அப்படி கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட கிரிக்கெட் விளையாட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அதில் விளையாடும் வீரர், வீராங்கனைகள் ஒரு அள்ளு அள்ளி விடுகின்றனர்.
போட்டிக் கட்டணம், வருடாந்திர ஒப்பந்தங்கள், ஐபிஎல் உள்ளிட்ட தொடர்கள் என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு மிகப் பெரிய பணத்தை சம்பாதிக்கின்றனர். குறிப்பாக நட்சத்திர வீரர்கள் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வருவாயாக ஈட்டி வருகின்றனர்.
ஏன், சில விநாடிகளே ஒளிபரப்பாகும் விளம்பரங்களில் கூட நடிப்பதற்கு கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பெற்றுக் கொள்வதாக கூறப்படுகிறது. இந்திய அளவில் அதிகபட்ச சொத்து மதிப்புகளை கொண்டு இருக்கும் கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்டால், ஊர் அறிந்த முன்னணி கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் மட்டுமே அனைவரின் காதுகளில் ஒலிக்கும் பெயராக வந்து விழும்.
அப்படி பார்க்கையில் புகழ் பெற்ற வீரர்களையே பின்னுக்குத் தள்ளி, சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் ஒரு ஆட்டத்தில் கூட விளையாடாமலும், ஏன் ஐ.பி.எல் தொடர் ஒரு போட்டியில் கூட களமிறங்காத வீரர் ஒருவர் இந்திய பணக்கார கிரிக்கெட் வீர்ர்களின் தரவரிசையில் முதலிடத்தை பிடித்து உள்ளார் என்றால் அனைவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
இருப்பினும், இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர்களைப் பொறுத்தவரை, சச்சின், தோனி மற்றும் கோலியை விட ஒரு கிரிக்கெட் வீரருக்கு அதிக சொத்து உள்ளது. அவர் தான்.. குஜராத் மாநிலம் பரோடா சமர்ஜித் ரஞ்சித்சிங் கெய்க்வாட். முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரர். இவர் தான் நாட்டின் பணக்கார கிரிக்கெட் வீரர் என்ற சிறப்பை தன் வசம் வைத்து உள்ளார்.
முன்னணி வீரரான விராட் கோலியின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கரின் சொத்து மதிப்பு ஆயிரம் 250 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனியின் சொத்து மதிப்பு ஆயிரத்து 40 கோடி ரூபாயாகும்.