உத்தரப் பிரதேசத்தின் சம்பால் மக்களவைத் தொகுதியின் உறுப்பினரும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான ஷபிகுர் ரஹ்மான் பார்க் மீது உத்தரப் பிரதேச காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
தாலிபானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து தேசதுரோக பிரிவு 124ஏ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் ஷபிகுர் ரஹ்மன் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
சமாஜ்வாதி எம்பியின் சர்ச்சைக் கருத்து
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளனர். இது தொடர்பாக சாமஜ்வாதி எம்.பி ஷபிகுர் ரஹ்மான்," ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட போது, நமது நாடு சுதந்திரத்திற்காக போராடியது. அதேபோல், தாலிபான்கள் தங்கள் நாட்டை சுதந்திரமாக ஆளும் உரிமை கேட்டனர்.
தாலிபான்கள் முன் மிகவும் பலம் வாய்ந்த ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளைக் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை" என்றார்.
பாஜக கடும் எதிர்ப்பு
எம்.பி.யின் இக்கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக மூத்தத் தலைவரும், உத்தரப் பிரதேச துணை முதலமைச்சருமான கேசவ் பிரசாத் மௌரியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், "சமாஜ்வாதி கட்சி இதுபோன்ற கருத்துக்களை எதன் அடிப்படையில் தெரிவிக்கிறது. தாலிபான்கள் குறித்து சமாஜ்வாதி கட்சி இதுபோல் பேசுகிறது என்றால், சமாஜ்வாதி தலைவர்களுக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கும் என்ன வித்தியாசம்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க:'கொலிஜியம் பரிந்துரை செய்தி' - ஊடகங்கள் மீது தலைமை நீதிபதி ரமணா அதிருப்தி