மும்பை: பஞ்சாபி மொழி பாடகரும், காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ்வாலா கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 29) அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தநிலையில், பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கானுக்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "சித்து மூஸ்வாலா கொலைக்கு பின்னணியில் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் முக்கிய குற்றவாளியாக இருப்பதாக தகவல் தெரிகிறது. முன்னதாக, சல்மான் கான் 'ஹம் சாத் சாத் ஹேன்' படப்பிடிப்பின் போது பிளாக்பக் (Blackbuck) என்ற வகை மானை வேட்டையாடியதாக கூறப்படுகிறது.
பிஷ்னோய் சமூகத்தில் பிளாக்பக் வகை மான் புனித விலங்காக கருத்தப்படுகிறது. சல்மான் கான் அதை வேட்டையாடியதாக கூறப்படும் நிலையில் அது அவர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக தெரிகிறது. இதுதொடர்பாக லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த 2018ஆம் ஆண்டு சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்" என்று தெரிவித்தனர்.