டெல்லி: காவல் நிலையங்களின் தரத்தினை அளவிடுவதற்கும், அவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்கும் சில குறிப்பிட்ட வரையறைகளை வகுக்குமாறு 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். அதனடிப்படையில், மத்திய உள் துறை அமைச்சகம் ஆண்டுதோறும் இந்தியாவில் சிறப்பாகச் செயல்படும் 10 காவல் நிலையங்களில் பட்டியலை வெளியிட்டுவருகிறது.
நடப்பாண்டிற்கான சிறந்த செயல்பாடுகளைக் கொண்ட காவல் நிலையங்களைத் தேர்ந்தெடுக்க சுமார் 16 ஆயிரத்து 671 காவல் நிலையங்களில் மக்கள் கருத்துக் கணிப்பு, காவல் துறையின் செயல்முறை, பதிவான குற்ற விவரம் எனப் பல்வேறு ஆய்வுசெய்ததாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய உள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில், தமிழ்நாட்டிலுள்ள சேலம் மாவட்டத்தின் சூரமங்கலம் காவல் நிலையம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. இது தமிழ்நாடு காவல் துறை இந்திய அளவில் சிறப்பாகச் செயல்படுவதைப் பறைசாற்றும்விதமாக அமைந்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அந்தப் பட்டியலில் மணிப்பூரின் தௌபால் காவல் நிலையம் முதல் இடத்திலும், அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் சங்க்லாங்க் காவல் நிலையம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. தெலங்கானா மாநிலத்தின் கரீம் நகர் காவல் நிலையம் டாப் 10 பட்டியலில் பத்தாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: சிறந்த காவல் நிலையமாக சூரமங்கலம் மகளிர் காவல் நிலையம் தேர்வு!