புதுச்சேரி:புதுச்சேரியில் தற்போது, மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் என். கோகுலகிருஷ்ணனின் (அதிமுக) பதவிக்காலம் வரும் அக்டோபர் 6ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனால், அந்த மாநிலங்களவை இடத்திற்கான வாக்குப்பதிவு வரும் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (செப். 15) தொடங்கியது. மேலும், வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 22ஆம் தேதி மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.
பெறப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 23ஆம் தேதி நடைபெறுகிறது. இம்மனுக்களை திரும்பப் பெற 27ஆம் தேதியே கடைசி நாளாகும்.
குடியரசுத்தலைவர் டூ மேயர் வரை
சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த 'தேர்தல் மன்னன்' என அழைக்கப்படும் 62 வயதான டாக்டர் கே. பத்மராஜன் என்பவர் 221ஆவது முறையாக சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் சட்டப்பேரவை அலுவகத்தில் உள்ள சட்டப்பேரவை செயலர் முனுசாமியை சந்தித்து மனுவை அளித்தார்.
221ஆவது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள அவர், இதுவரை நாடாளுமன்றம், சட்டப்பேரவை, குடியரசுத் தலைவர், துணை குடியரசுத்தலைவர், மேயர் பதவிகளுக்கு தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தினமும் 77 பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு