தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெங்களூருவில் லாரி மீது கார் மோதி கோர விபத்து - தாயும், மகளும் உடல் கருகி உயிரிழப்பு!

Karnataka Accident news: கர்நாடகாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதியதில், காரில் பயணித்த தாய் மற்றும் 2 வயது குழந்தையும் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Karnataka Accident news
லாரி மீது கார் மோதி கோர விபத்து... தாயும், மகளும் உடல் கருகி பலி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 1:32 PM IST

பெங்களூரு (கர்நாடகா):நேற்று காலை (அக்.2) என்.ஐ.சி.இ (NICE) சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் தாயும், குழந்தையும் உடல் கருகி உயிரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காரில் பயணம் செய்த மற்றொரு குழந்தையும், தந்தையும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம் மாவட்த்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கு சிந்து என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். மேலும் இவர்கள் பெங்களூர் ராமமூர்த்தி நகர் அருகே உள்ள விஜினாபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், மகேந்திரன் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, தனது 2 மகள்களுடன் குடும்பமாக நாகசந்திராவிற்குச் சென்றுள்ளனர்.

அப்போது, அதிகாலை சுமார் 4 மணியளவில் மைசூரு சாலையில் இருந்து கனகபுரா சாலையை நோக்கி கார் சென்று கொண்டிருந்துள்ளது. இதனையடுத்து சோம்புரா என்ற பகுதியில் செல்லும்போது மகேந்திரன் ஓட்டி வந்த கார் தனது கட்டுப்பாட்டை இழந்து, எதிரே சென்ற லாரி மீது மோதியுள்ளது. மேலும், லாரி மீது அதிவேகமாக மோதிய கார் அருகில் இருந்த சுவற்றில் மோதியதில், தீப்பிடித்து எரியத் துவங்கியுள்ளது.

அப்போது, மகேந்திரனும் அவரது மூத்த மகளும் பலத்த காயங்களுடன் காரில் இருந்து அதிர்ஷ்டவசமாக வெளியேறியுள்ளனர். ஆனால், சிந்துவும் அவரது 2 வயது மகளும் காரிலிருந்து வெளியேறுவதற்குள் தீ மளமளவென பரவியுள்ளது. அதில் இருவரும் காரிலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். பின்னர், இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த போலீசார், மகேந்திரனையும், அவரது மூத்த மகளையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் இறந்தவர்களின் உடலைக் கைப்பற்றி கிம்ஸ் (KIMS) மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தலகட்டபுரம் போக்குவரத்து புலனாய்வுத் துறை போலீசார், இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இதுவரை விபத்திற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. ஒருவேளை மகேந்திரன் தூக்க கலக்கத்தில் லாரி மீது மோதியிருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. தற்போது கார் மோதியதில், அந்த லாரியும் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி சாலை ஓரத்தில் கவிழ்ந்த நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திருப்பத்தூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மோதல்!

ABOUT THE AUTHOR

...view details