மகாராஷ்டிரா: மும்பை புறநகர்ப் பகுதியான சாக்கி நாக (Sakinaka) பகுதியில் 30 வயதான பெண் ஒருவர் ரத்தக் காயங்களுடன் உயிருக்குப் போராடுவதாக செப்டம்பர் 9ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். முதற்கட்ட விசாரணையில், அப்பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு இரும்புத் தடியால் பிறப்புறுப்பு உள்ளிட்ட பாகங்களில் கொடூரமாகத் தாக்கியிருப்பது தெரியவந்தது.
மேலும், அப்பெண்ணைக் கண்டெடுத்த பகுதி அருகே நின்றுகொண்டிருந்த டெம்போ வாகனத்தைக் காவல் துறையினர் சோதனையிட்டனர். அப்போது, அதற்குள் ரத்தக் கறைகள் இருப்பது தெரியவந்தது.
சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே இச்சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட மோகன் செளகான் (45) என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல் துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.