சத்ரபதி சம்பாஜிநகர் (அவுரங்காபாத்): மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத், ஹர்சுல் பகுதியில் அமைந்துள்ள பிசாதேவி சாலை அருகே உள்ள சைலானி பாபா தர்காவிற்கு தரிசனம் செய்ய, பக்தர்கள் சென்ற டெம்போ, வைஜாப்பூர் அருகே சம்ருத்தி நெடுஞ்சாலையில் உள்ள ஜாம்பர் கிராம சுங்கச்சாவடியில் லாரி மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.
இதனை அடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து உள்ளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு, நான்கு மாத குழந்தை உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர். மேலும் சிலர் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் விரைந்து செயல்பட்டு காயம் அடைந்தவர்களை மீட்டு, சம்பாஜி நகரில் உள்ள காதி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த விபத்தில் சுமார் 20 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது மட்டுமல்லாது, இந்த விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், விபத்தில் சிக்கிய பயணிகள் அனைவரும் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள பதார்டி மற்றும் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. மேலும், பக்தர்கள் சென்ற டெம்போ அதிவேகமாகச் சென்ற காரணத்தால், சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் வேகமாக மோதியதில் விபத்துக்குள்ளானதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி, "சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் நடந்த சம்ருத்தி விரைவுச் சாலை விபத்து வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்படும்" என்று 'X' வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:"நீங்கள் தான் என் தாய்.. நீங்கள் தான் என் சகோதரிகள்..." மகளிர் உரிமை மாநாட்டில் ஒலித்த பிரியங்கா காந்தியின் குரல்!