ஹைதராபாத் (தெலங்கானா): நடிகை சாய் பல்லவி நடிப்பில் வரும் நாளை (ஜூன் 17) வெளிவர உள்ள 'விரத பர்வம்' திரைப்படத்தின் புரோமோஷனுக்காக யூ-ட்யூப் ஒன்றிற்கு இவர் அளித்த பேட்டி தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த பேட்டியில் அவர், 'காஷ்மீரில் பண்டிட்டுகளின் படுகொலைக்கும், பசுவுக்காக மனிதர்கள் தாக்கப்படுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை' எனக் கூறியுள்ளார்.
'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தைப் பற்றி கேட்டபோது, "நான் நடுநிலையான குடும்பச்சூழலில் வளர்ந்தேன். நல்ல மனிதராக இருக்க வேண்டுமென்று கற்று தந்துள்ளனர். நான் இடதுசாரி, வலதுசாரி என இரண்டையும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், எனக்கு எது சரி, எது தவறு என்று நம்மால் ஒருபோதும் கூற முடியாது. 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தில் பண்டிட்டுகள் எவ்வாறு கொல்லப்பட்டனர் என்பதைக் காட்டியுள்ளனர். ஆனால், சமீபத்தில் கரோனா காலத்தில் ஒரு சம்பவம் நடந்தது.
பசுவைக் கொண்டு சென்றவரை இஸ்லாமியர் என்று கருதி சிலர் கும்பலாகத் தாக்கினர். அந்த நபர் கொல்லப்பட்டவுடன் 'ஜெய் ஸ்ரீராம்' என்று அவர்கள் முழங்கினார்கள். காஷ்மீரில் அன்று நடந்ததற்கும் தற்போது நடந்து கொண்டிருப்பதற்கும் என்ன வித்தியாசம்? நீங்கள் நல்லவராக இருக்காவிட்டால், இடதுசாரியாக இருந்தாலும், வலதுசாரியாக இருந்தாலும் நீதி கிடைக்காது.