மும்பை:சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய், நேற்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. முன்னதாக, அவர் கடந்த நவம்பர் 12 அன்று உடல் நலக் குறைவால் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர், நேற்று (நவ.14) இரவு 10.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, அவரது இறப்பை சஹாரா குழுமம் மிகுந்த வருத்தத்துடன் அறிக்கையாக தெரிவித்துள்ளது. மேலும், அவரது இறுதிச் சடங்குகள் குறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
யார் இந்த சுப்ரதா ராய்? சில்லறை வணிகம், ரியல் எஸ்டேட் மற்றும் நிதிச் சேவை தொடர்பான பகுதிகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நபராக ராய் கருதப்பட்டார். அதேநேரம், சஹாரா குழுமம் மீதான பல்வேறு புகார்களின் கீழ் பல சட்டப் போராட்டங்களையும் ராய் எதிர்கொண்டார்.
சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் சஹாரா ஹவுஸிங் இன்வெஸ்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகிய இரண்டு கம்பெனிகளிலும் முதலீட்டாளர்களின் மூதலீட்டைக் கொண்டு விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக, 2011ஆம் ஆண்டு செபி நிறுவனம் தொடுத்த வழக்கையும் ராய் எதிர்கொண்டார்.
இதனையடுத்து, ராய் தரப்பிலான முறையீடு ஆகியவற்றைத் தொடர்ந்து, இரண்டு கம்பெனிகளும் முதலீட்டாளர்களின் பணத்தை 15 சதவீத வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என்ற செபியின் உத்தரவை, உச்ச நீதிமன்றம் கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று உறுதி செய்தது.
இது ஒருபுறம் இருக்க, இந்திய ரயில்வே துறைக்குப் பிறகு நாட்டின் இரண்டாவது மனித தலைமையகமாக சஹாரா குழுமம் விளங்குவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, 14 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு பிரட் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றை சஹாரா குழுமம் வழங்கி வருகிறது. இதன் மூலம் நாட்டின் பல்வேறு மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதுடன், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உதவியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஒரு முறை ராய் உச்ச நீதிமன்றத்திற்கு ஆஜராகச் சென்றபோது, குவாலியரைச் சேர்ந்த ஒருவர், ராய் ஒரு திருடன் எனக் கூறியதுடன், அவர் மீது மை எறிந்தார். இந்த செயல், அப்போது பெரிதாக பேசப்பட்டது. அதேபோல், 20 ஆயிரம் கோடி ரூபாயை முதலீட்டாளர்களுக்கு திருப்பிச் செலுத்தாமல் இருந்தது தொடர்பாக முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகாத ராய் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இதன்படி, அவரை கைது செய்ய 2014ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உங்க மொபைல் ஹேக் செய்யப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?