தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புயல் எதிரொலி - புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! - safety measures and precautions for heavy rain

வங்கக்கடலில் நிலவியுள்ள புயலை எதிர்கொள்ளும் விதமாக புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

புயல் எச்சரிக்கை: முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற முன்னெச்சரிக்கை கூட்டம்
புயல் எச்சரிக்கை: முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற முன்னெச்சரிக்கை கூட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 10:35 PM IST

புயல் எச்சரிக்கை: முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற முன்னெச்சரிக்கை கூட்டம்

புதுச்சேரி: வங்கக்கடல் தென் கிழக்கு பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் திங்கட்கிழமை (டிச. 4) புயலாக மாறும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில், இந்த புயல் சென்னை - மசூலிபட்டினம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் கரையை கடக்கும்போது வடதமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 முதல் 70 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரியில் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்த கூட்டம் சட்டமன்ற அமைச்சரவை அலுவலகத்தில் இன்று (டிச.2) மாலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலர் ராஜீவ் வர்மா, மாவட்ட ஆட்சியர் வல்லவன் மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதிகளில் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள ஒவ்வொரு துறையும் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வல்லவன் விளக்கம் அளித்தார்.

ஏனாமில் புயல் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்பதனால் புயலை எதிர்கொள்ள சென்னை அரக்கோணத்தில் இருந்து 2 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இதில் அரக்கோணத்தில் இருந்து ஒரு குழுவை புதுச்சேரிக்கும் மற்றொரு குழு காரைக்காலுக்கும் அனுப்பப்படுவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, விசாகப்பட்டினத்தில் இருந்து ஒரு குழு ஏனாமிற்கும் அனுப்பி வைக்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்தார். புதுவையில் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 211 மையங்களும், அங்கு வருபவர்களுக்கு உணவு உட்பட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரிடர் அவசர கால மையம் 24 மணி நேரமும் செயல்படவும், பொதுமக்களுக்கு உதவ 12 அரசு துறைகளில் கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளது. குடிநீர், மின்சாரம் தடைபடாமல் பொதுமக்களுக்கு வழங்கவும், புயலில் மரங்கள் விழுந்தால் உடனுக்குடன் அகற்றவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சாலையோரத்தில் தங்கியுள்ள ஆதரவற்றர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக புயல், வெள்ளம் உட்பட பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவ பல்வேறு உயர்மட்டம் மற்றும் கீழ்நிலை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 5 ஆயிரம் பேருக்கு பேரிடர் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக மறு உத்தரவு வரும் வரை இந்த 5 ஆயிரம் பேரின் விடுமுறை ரத்து செய்யப்பட்டு, அனைவரும் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் இன்று (டிச.2) முதல் அந்தந்த பேரிடர் குழுக்களில் இணைந்து பணிகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் புயல் எச்சரிக்கை காரணமாக திங்கட்கிழமை (டிச.4) புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள அனைத்து பள்ளி-கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க:அத்தியாவசிய பணி தவிர்த்து வெளியே வருவதை தவிர்க்கவும் - சென்னை காவல்துறை வேண்டுகோள்!

ABOUT THE AUTHOR

...view details