சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு (2022) நடைபெறுகிறது.
மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 19 இடங்களுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. சுக்பீர் சிங் பாதல் ஜலாலாபாத்தில் போட்டியிடுகிறார். அண்மையில் பாஜகவிலிருந்து அகாலி தளத்திற்கு மாறிய அனில் ஜோஷியும் அமிர்தசரஸ் வடக்கில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், தரம்கோட்டில் தோட்டா சிங், கெம்கரன் தொகுதியில் வீர்சா சிங் வால்டோஹா, ராம்பூர் தொகுதியில் சிக்கந்தர் சிங் மாலுகா என நட்சத்திர வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலை ஷிரோமணி அகாலிதளம் பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து சந்திக்கிறது. அதன்படி ஷிரோமணி அகாலிதளத்துக்கு 97 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 20 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஷிரோமணி அகாலிதளம் கட்சிக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ஜிஎஸ் பாலி கூறுகையில், “முதலில் ஷிரோமணி அகாலிதளம் கட்சிக்கு வாழ்த்துகள். கேப்டன் அமரீந்தர் சிங், ஹரிஷ் ராவத், சோனியா காந்தி ஆகியோர் விரைவில் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிப்பார்கள்” என்றார்.
இதற்கிடையில் ஆம் ஆத்மி ஷிரோமணி அகாலிதளம் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இது குறித்து ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்தார் சிங் கூறுகையில், “சுக்பீர் சிங் பாதல் தலைமையிலான அரசு பஞ்சாப் மாநிலத்தை 10 ஆண்டுகளாக கொள்ளையடித்தது. வீடு வீடாக போதைப் பொருள்களை விநியோகித்தது.
தற்போது மக்கள் பாதலிடம் கேள்வியெழுப்புகின்றனர். ஆகையால் அவர் அவசர அவசரமாக வேட்பாளர்களை அறிவித்துள்ளார்” என்றார்.
இதையும் படிங்க : பஞ்சாப் வருபவர்களுக்கு இனி புதிய கட்டுப்பாடு