சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடைபெற்ற இயற்கை விவசாயம் தொடர்பான கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் வேளையில், நாட்டில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு அடித்தளமாக அமையும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தொடங்கியுள்ளோம். நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்த அனைவரின் பங்களிப்புதான் அடிப்படை, அந்த பங்களிப்புதான் மேம்பாட்டை நோக்கி வழிநடத்தும்.
இந்தியா புவியியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் விவசாயம் சார்ந்த நாடாக உள்ளது. தற்போது சூரத்தில் உருவாகி வரும் இயற்கை விவசாய மாடல், ஒட்டுமொத்த இந்தியாவுக்கே முன்மாதிரியாக அமையும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான இயற்கை விவசாய கருத்தரங்கில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.