தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மையப்புள்ளி சபர்மதி ஆசிரமம்! - ஆசிரமம்

சபர்மதியின் துறவி என்று காந்தி அழைக்கப்படுகிறார். மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியபோது, அகமதாபாத்தில் ஒரு ஆசிரமம் கட்ட முடிவு செய்தார்.

Sabarmati Ashram
Sabarmati Ashram

By

Published : Oct 3, 2021, 7:04 AM IST

Updated : Oct 3, 2021, 7:18 AM IST

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திய அண்ணல் காந்தியடிகளுக்கும், சபர்மதி ஆற்றிற்கும் இடையே தனித்துவமான உறவு உண்டு.

ஆகையால் சபர்மதியின் துறவி என்று காந்தி அழைக்கப்படுகிறார். மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியபோது, அகமதாபாத்தில் ஒரு ஆசிரமம் கட்ட முடிவு செய்தார். அவர் 1917இல் சபர்மதி ஆசிரமத்தை நிறுவினார். இருப்பினும், சபர்மதி ஆசிரமத்திற்கு முன், அவர் இரண்டு ஆண்டுகள் கொச்ராப் ஆசிரமத்தில் தங்கினார்.

காந்தி ஆசிரமம்

இது குறித்து வரலாற்று ஆய்வாளர் மானேக் பட்டேல் கூறுகையில், “ஆசிரமம் அமைக்கும் எண்ணம் காந்தியடிகளுக்கு முன்னரே உண்டு.

அவர், பிரேமசந்த்பாய் ஆற்றங்கரையில் ஒரு ஆசிரமம் நிறுவுவதற்காக ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கினார். இதற்காக இரண்டாயிரத்து 556 ரூபாய் அளித்தார்.

இந்த ஆசிரமத்தின் கட்டுமான பணிகளும் நடைபெற்றன. எனினும் ஒரு கட்டத்தில் கொச்ராப் ஆசிரமத்திலிருந்து சபர்மதி ஆசிரமத்துக்கு காந்தி மாறினார்” என்றார்.

சபர்மதி ஆசிரமம் தோற்றம்

காந்திக்கு ஆசிரமம் அமைக்கும் திட்டம் இருந்தது. இதன்மூலம் சொந்த மக்களை ஒன்றிணைக்க முடியும் என்று அவர் நம்பினார். அவரின் இந்த எண்ணம் சபர்மதி ஆற்றங்கரையில் நிறைவேறியது. பாபு தனது ஆசிரமத்தை சபர்மதிக்கு மாற்றினார். இது குறித்து காந்தி ஆசிரம இயக்குநர் அதுல் பாண்ட்யா, “இந்த இடம் ஒரு ஆசிரமத்திற்கு ஏற்றது என்று அந்த சமயத்தில் காந்திஜி கூறினார். ஏனென்றால் இந்த ஆற்றங்கரையின் ஒரு பக்கத்தில் தகனம் செய்யும் இடமும், மறுபுறம் சிறைச்சாலையும் அமைந்துள்ளது.

எனவே இந்த ஆசிரமத்திற்கு வரும் எந்த சத்தியாகிரகிக்கும் இரண்டு தேர்வுகள் மட்டுமே இருக்கும். சத்தியாகிரகம் செய்து சிறை செல்லுங்கள் அல்லது வாழ்ந்து மடியுங்கள் என்பதே அது. எளிமை என்பது காந்திய வாழ்க்கையின் ஒரு அங்கமாகும், அதன் பார்வை காந்தி ஆசிரமத்திலும் காணப்பட்டது. அதே நேரத்தில், ஆசிரமத்தில் கூட்டுப் பணிகளுக்குச் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

காந்தி ஆசிரமத்தின் மிக முக்கியமான பகுதியை ஹிருதய குஞ்ச் என்று அழைக்கலாம். இந்த ஹிருதய குஞ்ச் காந்தியின் உறைவிடம். இதன் பெயருக்குப் பின்னால் ஒரு சிறப்பு உள்ளது. இது பற்றி அதுல் பாண்ட்யா, “அண்ணல் காந்தியடிகளின் அதிகாரப்பூர்வ உறைவிடம் ஹிருதய குஞ்ச் என்று அழைக்கப்பட்டது. இது காந்திஜியின் இல்லம்

இந்த ஆசிரமத்தின் இருதயம் காந்தி. ஆகையால் இந்த இடத்துக்கு ஹிருதய குஞ்ச் என்ற பெயர் வந்தது. இருப்பினும் இங்கு காந்தியடிகளுக்கு தனிப் படுக்கையோ அல்லது தனி இடமோ கிடையாது. இங்குள்ள வரண்டாவில்தான் காந்தியடிகள் படுத்துத் தூங்குவார். ராட்டையில் நூல் நூற்பார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மையப்புள்ளி சபர்மதி ஆசிரமம்!

இந்த ஹிருதய குஞ்சிற்கு அருகில் பிரார்த்தனைக் கூடம் ஒன்று உள்ளது. காந்திஜி பிரார்த்தனையில் உறுதியாக இருந்தார். ஆசிரமத்தின் பணிகளும் தினசரி பிரார்த்தனையுடன் தொடங்கின. அந்தச் சமயத்தில் காந்திஜி ஒரு சர்வதேச முக்கிய நபராக இருந்தார், அதனால் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பலர் அவரைச் சந்திக்க சபர்மதி ஆசிரமத்திற்கு வருவார்கள், ஆனால் ஆசிரமத்தின் விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருந்தன.

இந்த ஆசிரமம் காந்திஜிக்கோ அல்லது மற்ற சத்தியாகிரகிகளுக்கோ புகலிடமாக மட்டும் இல்லை. சுதந்திர இயக்கத்திலும் ஆசிரமம் முக்கிய இடத்தைப் பிடித்தது. இது தேசிய விழிப்புணர்வு, சமூக மாற்றத்தின் பல இயக்கங்களின் தொடக்கமாகத் திகழ்ந்தது. சபர்மதி ஆசிரமத்தில் தற்போது 165 கட்டடங்கள் உள்ளன. காந்திஜியின் மரணத்திற்குப் பிறகு, 'என் வாழ்க்கை என் செய்தி' என்ற கேலரி ஆசிரமத்தில் நிறுவப்பட்டது.

அண்ணல் காந்தியடிகள்

இந்தத் தொகுப்பு பாபுவின் குழந்தைப் பருவம் முதல் இறுதிப் பயணம்வரை அவரது வாழ்க்கை முறையை எடுத்தியம்புகிறது. இந்த ஆசிரமத்தை நிறுவுவதன் முக்கிய நோக்கம் மக்களைத் தற்சார்பு என்னும் 'ஆத்ம நிர்பார்' ஆக்குவதோடு உள்நாட்டு விஷயங்களை ஏற்றுக்கொள்வதாகும்.

அதே சமயத்தில், காந்திஜியின் இறப்புக்குப் பிறகு அவரது நினைவாக பாபு அருங்காட்சியகம் இந்த ஆசிரமத்தில் கட்டப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தில் காந்திஜியின் மூக்கு கண்ணாடிகள், குடிநீருக்காக அவர் பயன்படுத்திய ஒரு செம்பு பாத்திரத்துடன் அவரது ராட்டையும் நினைவுச்சின்னங்களாக உள்ளன.

இதையும் படிங்க: அண்ணல் காந்தியடிகள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை!

Last Updated : Oct 3, 2021, 7:18 AM IST

ABOUT THE AUTHOR

...view details