பத்தனம்திட்டா:புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜையில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் கேரளா செல்கின்றனர். ஒரு மண்டலம் விரதம் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சபரிமலை செல்லும் பக்தர்கள், ஐயப்பனை தரிசித்து மண்டல பூஜையில் கலந்து கொள்கின்றனர்.
நடப்பாண்டுக்கான சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை கடந்த நவம்பர் 17ஆம் தேதி திறக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் விரதம் இருந்து மண்டல பூஜையில் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசித்தனர். இன்றுடன் (டிசம்பர் 27-ஆம் தேதி) 41 நாள் மண்டல பூஜை நிறைவு பெற்றநிலையில், ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இருந்த தடை முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், பக்தர்களின் வருகை கட்டுக்கடங்காத அளவில் இருந்ததாக சபரிமலை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.