பத்தனம்திட்டா: 2022 Sabarimala Makara Jyothi:இன்று ஜனவரி 14ஆம் தேதி, மாலை உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்குப் பூஜை வெகு விமரிசையாக, பக்தர்களின் ஐயப்ப கோஷத்துடன் கொண்டாடப்பட்டது.
முன்னதாக, சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் (தங்க ஆபரணங்கள்) திருவாபரணங்கள் அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் சாஸ்தா கோயிலிலிருந்து ஐயப்ப பக்தர்கள் தலைச்சுமையாகக் கொண்டுவரப்பட்டன.
பந்தள அரண்மனையிலிருந்து புறப்பட்ட திருவாபரண பவனியில் இன்று மதியம் 12.29 மணியளவில் மகர சங்கராந்தி பூஜை நடைபெற்றது. சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குச் செல்லும் நேரத்தில் ஐயப்பனுக்கு இந்தப் பூஜை நடத்தப்படுகிறது.
மகரஜோதி தரிசனம்
பின், 2:29 மணிக்கு திருவிதாங்கூர் மன்னர்களின் அரண்மனையான கவடியாரில் இருந்து கொடுத்து விடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு பாத்திரத்தில் ஊற்றாமல், நேரடியாக விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது.
மாலை சரங்குத்தி வந்தடைந்து பின், அங்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு அலுவலர்களின் வரவேற்புக்குப் பின் சுவாமி சன்னிதானத்துக்கு முன்பு இருக்கும் 18 படிகளின் வழியாக மாலை 6:25க்கு வந்ததும் தந்திரியும், மேல்சாந்தியும் திருவாபரணத்தைப் பெற்றுக் கொண்டனர்.