கேரளா: பத்தனம்திட்டாவில் உள்ள சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில் நடை நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், கேரளா மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வருகை தருகின்றனர். தென்னிந்தியாவின் மிகப்பெரிய யாத்திரை தலங்களில் ஒன்றான சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடையானது நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்பட்டு, டிசம்பர் 25ஆம் தேதி வரை சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இக்கோயிலில் நடைபெறும் மண்டல கால பூஜை, மகர விளக்கு, மகா உற்சவம் மற்றும் சடங்குகளைத் தொடர்ந்து, ஜனவரி 20ஆம் தேதி சபரிமலை கோயில் நடை சாத்தப்படுகிறது. இதனால் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. சபரிமலைக்கு பக்தர்கள் வருவதற்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்தும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், சபரிமலையில் இந்த ஆண்டிற்கான மண்டல பூஜை இன்று நடைபெற்றது. ஐயப்பனின் தங்க அங்கி ஏந்திய ஊர்வலம் நேற்று மாலை மலைக்கோயிலை வந்தடைந்தது. மலைக்கோயிலில் தங்க அங்கி அலங்கரிக்கப்பட்ட ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தரிசனத்திற்கான வரிசை அப்பாச்சிமேடு வரை நீண்டிருந்தது.
இதனை அடுத்து, இன்று 11 இரவு மணிக்கு ஐயப்பன் கோயில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகர விளக்கு பூஜைக்காக 30ஆம் தேதி மாலை மீண்டும் திறக்கப்படும். திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ் பிரசாந்த், “சபரிமலையில் 242 கோடியே 71 லட்சத்து 21 ஆயிரத்து 711 ரூபாய் மண்டல கால வருவாயாக கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 18 கோடியே 72 லட்சத்து 51 ஆயிரத்து 461 ரூபாய் அதிகமாக கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 222 கோடியே 98 இலட்சத்து 70 ஆயிரத்து 250 ரூபாய் கிடைத்தது” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க:கர்நாடகாவில் ஐயப்ப பக்தர்களுக்கு 2வது முறையாக தன் வீட்டில் உணவு ஏற்பாடு செய்த இஸ்லாமிய நபர்..!