டெல்லி : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டு நிதிக் கொள்கை குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசுகள் வரை உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து 82 புள்ளி 68ஆக முடிவடைந்து உள்ளது. நடப்பு 2023 - 24 நிதி ஆண்டிற்கான ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. கூட்டத்தில், முக்கிய வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி மாற்றம் கொண்டு வரவில்லை.
வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6 புள்ளி 5 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. அமெரிக்க பங்குச் சந்தையில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழல், உள்நாட்டு சந்தையின் வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை மீதான நிலையற்ற சூழல் உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்க டாலர் கடந்த சில நாட்களாக வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை அறிவிப்பால் இந்திய ரூபாய் வளர்ச்சி கண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதன் மூலம் உருவாக்கப்பட்ட அதிகப்படியான பணப்புழக்கம் அதனால் உருவாகி நிதிச் சுமை குறைப்பு காரணமாக ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசுக்கு பெரும் லாபபங்கு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் இந்த நடவடிக்கையின் மூலம் வங்கி அமைப்பில் இருந்து சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் என நிதி பங்கீடு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பணப்புழக்கத்தின் இறுக்கமான நடவடிக்கையால் உற்பத்தித் துறைகளின் கடன் தேவைகள் பாதிக்கப்படாது எனக் கூறப்பட்டு உள்ளது. உலக சந்தைகளில் ஏற்படும் பொருளாதார சிக்கல் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றில் ரூபாய் எதிர்மறையான சார்புடன் வர்த்தகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், பொருளாதார சிக்கல் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து உள்ள நிலையில் சர்வதேச சந்தையில் அதன் பிரதிபலிப்பு ரூபாயை ஆதரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க :"ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே தொடரும்" - ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!